அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான் ‘ஜங்கிள் புக்’. இந்த படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது ‘தி லைன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. லைன் கிங் அனிமேஷன் படமாக வெளிவந்த காலகட்டத்திலிருந்து அந்த படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு உண்டு.பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான ‘தி லைன் கிங்’ படத்துக்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் ஷாரூக் கான். மற்றும் அவரது மகன் ஆர்யன். ஷாரூக் கான், லையன் முபாசாவுக்காக குரல் கொடுக்கிறார். முபாசாவின் மகனும், முக்கிய கதாபாத்திரமுமான சிம்பாவுக்காக ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் குரல் கொடுக்கிறார். தமிழிலும் இதுபோல முன்னணி நடிகர்கள் டப்பிங் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் யாரும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக பிரபல தமிழ் வசன எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் மதன் கார்கி இந்த படத்திற்கான தமிழ் வசனங்களை எழுத இருக்கிறார்.
‘பத்மாவதி’, ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பாகுபலி’ என ஏற்கெனவே வேற்றுமொழிப் படங்களுக்குத் தமிழ் வசனங்களை எழுதியுள்ளார் மதன் கார்க்கி. அத்துடன், ‘2.0’, ‘எந்திரன்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’ எனப் பல தமிழ்த் திரைப்படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகின்ற ஜூலை 19ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் மிக பிரமாண்டமாக வெளியாகிறது.