Skip to main content

மாமன்னன் படத்திற்கு தடை கோரிய வழக்கு - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

maamannan release issue

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமன்னன்'. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க வடிவேலு, ஃபகத் பாசில், ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 29ஆம் வெளியாகவுள்ள நிலையில் உதயநிதி நடிப்பில் கடைசி படமாக வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே மாமன்னன் படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமசரவணன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், "கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற படத்தில் உதயநிதி நடித்து வந்தார். 80  சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சில காரணங்களுக்காக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இன்னும் 20 சதவீத காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் படம் முழுவதும் முடிந்துவிடும்.

 

ஆனால், மாமன்னன் படத்தை தனது கடைசி படமாக உதயநிதி அறிவித்துள்ளார். இதுவரை ஏஞ்சல் படத்திற்கு ரூ. 13 கோடி செலவு செய்துள்ளோம். ஏஞ்சல் படம் முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். 8 நாட்கள் கால்ஷீட் கேட்டும் உதயநிதி தர மறுக்கிறார். ஏஞ்சல் படத்தை முழுவதும் முடிக்க வேண்டும் அல்லது இழப்பீடாக உதயநிதி ரூ. 25 கோடி தர வேண்டும். அதுவரைக்கும் மாமன்னன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

இந்நிலையில் இந்த மனு இன்று நீதிபதி குமரேஷ்பாபு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் கேட்டு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இருவரும் வருகிற 28ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்