மலையாள திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் விஜய் பாபு. இவர் மீது கோழிக்கோட்டை சேர்ந்த நடிகை ஒருவர் சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அதனை வீடியோ எடுத்து தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து இளம் பெண் ஒருவர் கடந்த ஆண்டு விஜய் பாபு தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இதனிடையில் விஜய் பாபு தன் மீது பாலியல் புகார் கொடுத்த நடிகையின் பெயரை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை பொது வெளியில் வெளியிட்டதால் விஜய் பாபுவின் மீது போலீசார் மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே நடிகர் விஜய் பாபுவை செயற்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் (AMMA) அறிவித்தது. மேலும் பாலியல் புகாரில் சிக்கியுள்ள விஜய் பாபு மீது நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம்(AMMA) தெரிவித்து. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் இதனை கண்டித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) உள்புகார் கமிட்டியில் இருந்து விலகுவதாக பிரபல மலையாள நடிகை மாலா பார்வதி விலகியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,"பாலியல் புகாரில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதன் மூலம் அவர் குற்றம் செய்திருப்பது தெளிவாக தெரிகிறது. அதனால் விஜய் பாபு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என உள்புகார் கமிட்டி பரிந்துரைத்தது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பிலும் இது தொடர்பாக எந்த குறிப்பும் இடம் பெறவில்லை. இதனை கண்டித்து உள்புகார் கமிட்டியில் இருந்து விலகுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.