தமிழில் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார் பாடலாசிரியர் விவேகா. இவரை நக்கீரன் ஸ்டுடியோஸ் 'பாட்டு கதை' நிகழ்ச்சி சார்பாக சந்தித்தோம். அப்போது பல நிகழ்வுகளைக் குறிப்பிட்ட அவரிடம், அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தின் 'ரத கஜ துரக...' என ஆரம்பிக்கும் தீம் சாங் உருவான விதம் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர் பதிலளித்தவை பின்வருமாறு,
"வீரம் படத்தில் எல்லா பாடல்களும் நான் தான் எழுதியிருந்தேன். எனக்கும் இயக்குநர் சிவாவுக்கும் 'சிறுத்தை' படத்திலிருந்தே நல்ல நட்பு இருந்து வருகிறது. இப்படத்தின் கதையை முழுவதுமாக முன்கூட்டியே அவர் என்னிடம் சொல்லிவிட்டார். பாடங்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, படத்திற்கு உதவுகிற பாடல்கள். இன்னொன்று படத்தின் கதையோட்டத்திற்குத் தேவைப்படுகிற பாடல்கள். இந்த 'ரத கஜ துரக' பாடலின் தேவை என்னவென்றால் ஹீரோ அடிபட்டு விழுந்து கிடக்கிற சூழலில் ஆக்ரோஷமாக எழுந்து நிற்பது போல் ஒரு காட்சி. அந்த சூழலுக்கு ஒரு மந்திரம் போல் வார்த்தைகள் இருந்தால் நன்றாக இருக்குமென்று இயக்குநர் எதிர்பார்த்தார். மேலும் சாதாரண வார்த்தைகளால் இல்லாமல் ஒரு வார்த்தைகளைக் கேட்கும்போது வேறொரு உணர்வு வரவேண்டும் என்பதுதான் அவருடைய எதிர்பார்ப்பு.
அதனால் அதற்கு மிகச் சரியாக சமஸ்கிருதமும் தமிழும் பயன்படுத்துவது மூலமாக ஒரு வித்தியாசமான உணர்வைக் கொடுக்க முடியும் என்று நான் நினைத்தேன். இந்தப் பாடல் ஸ்டுடியோவில் எழுதப்பட்டதுதான். ரீரெக்கார்டிங் வர இடத்தில் ஒரு பாடல் வைக்கலாமா என்று கேட்டவுடன், உடனே ஓகே சொல்லிவிட்டு ஸ்டுடியோவில் எழுதப்பட்ட பாடல்தான் இப்பாடல். கம்போஸ் பண்ணிட்டு திரையில் பார்க்கும் போது அது மிகவும் நன்றாக இருந்தது. கதையோட்டத்திற்கு உதவுகிற பாடலாக நாங்கள் செய்தது. படத்தினுடைய விளம்பரத்திற்கு மிகப் பெரியளவில் உதவியது இப்பாடல்" என்றார்.