நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சத்திய சோதனை படத்தின் பாடலாசிரியர் வேல்முருகனைச் சந்தித்தோம், படம் குறித்து தன்னுடைய அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கோபமே வராத இயக்குநர் சுரேஷ் சங்கையா. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் சிறிதளவு கூட கோபப்பட மாட்டார். கோபம் வந்தாலும் அமைதியாகவே இருப்பார். சுரேஷ் சங்கையா, அல்போன்ஸ் புத்திரன் போன்ற இயக்குநர்கள் அடிக்கடி படங்கள் செய்வார்கள், அவர்களுடைய படங்களில் நாம் பாடல்கள் எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவர்கள் ஆறு வருடத்திற்கு ஒரு படம் தான் செய்கிறார்கள்.
இந்தப் படத்தில் பத்து சீன்களாக எடுக்க வேண்டிய காட்சிகளை ஒரு பாடலாக நான் மாற்றிக் கொடுத்தேன். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிறைய பணம் மிச்சமாகியிருக்கிறது. கதைக்குத் தேவையான பாடலாக அது இருக்கும். ஆனால் இயக்குநர் சுரேஷ் சங்கையா தன் படங்களில் அதிகமாக பாடல்களே வைக்க மாட்டார்.
இயக்குநர் சுரேஷ் சங்கையாவுக்கு பெரிய நடிகர்களுடன் வேலை செய்ய வேண்டும் என்கிற ஆசை இப்போது தான் வந்திருக்கிறது. சிறிய நடிகர்களை வைத்து படங்கள் செய்ய வேண்டும் என்பதே முதலில் அவருடைய எண்ணமாக இருந்தது. ஆனால் நாங்கள் நிறைய எடுத்துச் சொன்ன பிறகு இப்போது ஒரு முக்கிய நடிகரோடு வேலை செய்வதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.