‘தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட்’ என்ற அமெரிக்க டிவி நிகழ்ச்சியில் போட்டியிட்டு, இறுதிப்போட்டியில் வென்று ஒரு மில்லியன் டாலர்களை பரிசாக பெற்றவர் தமிழகத்தைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம்.
இந்தியா திரும்பியவுடனேயே இவருக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டு விழா ஒன்றை நடத்தினார். அந்த விழாவில், லிடியன் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவதை விட தானாக பல உச்சங்களைத் தொடுவதுதான் தன் விருப்பம் என்று ரஹ்மான் கூறியிருந்தார்.
12 வயதே ஆகும் லிடியன் தன்னுடைய நான்கு வயதிலிருந்து இசையை கற்று வருகிறார். லிடியனின் அப்பாவும் தமிழ் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது நடிகர் மோகன்லால் இயக்கும் மலையாளப் படமான பரோஸுக்கு லிடியன் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகள் படமான இது போர்த்துகீசிய இதிகாச கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. இது வாஸ்கோ ட காமாவின் கதையோடும் தொடர்பு கொண்டது. இந்தியாவின் முதல் 3டி படமான ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை எழுதிய ஜிஜோ புன்னூஸ் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். அக்டோபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படுகிறது. பொர்ச்சுக்கல், கோவா உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.