"என்னை நோக்கி பாயும் தோட்டா", "கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்" போன்ற பல திரைப்படங்களுக்கு கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்துகொடுக்கும் பணியை செய்து வந்த திரு. பாலமுருகன் கடந்த வாரம் 11ம் தேதி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நிதியுதவி வேண்டி ”லாக்டவுன்” திரைப்பட இயக்குநர் திரு.பில்லா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்....
"பலகோடி கணக்கில் வர்த்தகம் நடைபெறுவதால் திரைத்துறையில் பணிபுரிபவர்களை இந்த சமூகம் பணக்காரர்கள் என்று எண்ணிவிடுகிறது. உண்மையில் நிலவரம் அப்படியே தலைகீழானது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இங்கு சம்பளம் குறைவுதான். ஒரு தனியார் துறையில் வேலை செய்யும் ஒரு சராசரி மனிதனுக்கு கிடைக்கும் சம்பளத்தை விட குறைவுதான். மற்ற நிறுவனங்களில் சம்பளம் மட்டுமல்லாது ஆயுள் காப்பீடு, தொழிலாளர் வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு போன்ற இதர சலுகைகள் கிடைக்கும். ஆனால் சினிமா துறையில் பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இவை எதுவுமே கிடையாது. வேலை செய்தால் கிடைக்கும் கூலி மட்டும் தான். அதை வைத்துகொண்டு தான் தங்களது குடும்பத்தை ஆயிரக்கணக்கானோர் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஒரு சராசரி வாழ்க்கையை நடத்திக்கொண்டிருந்தவர் தான் திரு. பாலமுருகன். கடந்த வாரம் 11ம் தேதி மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார்.
படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகளான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்துகொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஜெயங்கொண்டத்தை சேர்ந்த பாலமுருகன் ”என்னை நோக்கி பாயும் தோட்டா”, ”கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” போன்ற பல திரைப்படங்களுக்கு திரம்பட வேலை செய்திருக்கிறார். இருபது வருடங்கள் இந்த துறையில் பணிபுரிந்த அவரை இழந்து ஒன்பதாம் வகுப்பு பயிலும் 14 வயது மகள் பிரதீபாவும் மனைவி உஷா பாலமுருகனும் செய்வதறியாது நிற்கதியாக நிற்கிறார்கள். தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நடன இயக்குநர்கள், சண்டைக் கலைஞர்கள் போன்றோர்களுக்கு இருக்கும் யூனியன் அமைப்புகளை போல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு எதுவும் இல்லை. குறிப்பாக படப்பிடிப்புக்கு பிந்தைய வேலைகளான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் கிராஃபிக்ஸ் போன்றவை அனைத்தும் வேறு நிறுவனங்கள் செய்துகொடுக்கின்றன. திரு பாலமுருகன் அவர்கள் பணியாற்றியதும் அப்படியான ஒரு சிறு நிறுவனம் தான். அங்கு அவருக்கு உயிர் காப்பீடோ, மருத்துவக் காப்பீடோ, இதர சலுகைகளோ எதுவும் இல்லை.
அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்துக்கு உதவுவதற்காக அவரோடு பணியாற்றிய நண்பர்கள் ஒரு குழுவாக செயல்பட்டு அவரது மகளின் கல்விக்கும் அவர்களது திடீர் வருமான இழப்பை ஓரளவு ஈடுசெய்யவும் நிதி திரட்டி வருகிறார்கள். இந்த பணியை ”லாக்டவுன்” திரைப்பட இயக்குநர் திரு.பில்லா மேற்கொண்டிருக்கிறார். 250 உறுப்பினர்கள் கொண்ட அந்த குழுவில் இருந்து இதுவரை 40,000 ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் கேரளா விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களின் மூலமாக நிதிதிரட்ட முன்வந்திருக்கிறார்கள். சமூக அவலங்களை தட்டிக்கேட்பதிலும் சமுதாய நலனில் அக்கறையும் உள்ள ஊடக துறையினரின் உதவியை நாடி இந்த வின்னப்பத்தை வைக்கிறோம். இதன் மூலம் கிடைக்கும் ஒரு ரூபாயும் தகப்பனை இழந்து வாடும் ஒரு குழந்தையின் கல்விக்கு பேருதவியாக இருக்கும்.
நன்றி.. -லாக்டவுன் திரைப்படக் குழு" என கூறியுள்ளனர்.