அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான் ‘ஜங்கிள் புக்’. இந்த படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது ‘தி லயன் கிங்’ படத்தையும் இயக்கியுள்ளார். இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது. லைன் கிங் அனிமேஷன் படமாக வெளிவந்த காலகட்டத்திலிருந்து அந்த படத்திற்கென தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு உண்டு.பெரும்பாலும் ஆங்கில அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஹாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகைகள் பின்னணி குரல் கொடுப்பதுண்டு. அந்த வகையான முயற்சிகள் இந்திய சினிமாவில் நடப்பது அரிதான விஷயம். தற்போது டிஸ்னி இந்தியாவின் அதீத முயற்சிகளால் அவெஞ்சர்ஸ் போன்ற ஆங்கில திரைப்படங்கள், ஒரு சில அனிமேஷன் திரைப்படங்களுக்கு இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளின் முன்னணி நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச முன்வந்திருக்கிறார்கள். அவெஞ்சர்ஸ் படத்தில் அயர்ன் மேன் கதாபாத்திரத்திற்கு தமிழில் விஜய் சேதுபதி டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், டிஸ்னியின் மிக பிரமாண்டமான லைவ் ஆக்ஷன் படமான ‘தி லயன் கிங்’ படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு பின்னணி குரல் கொடுக்க முன்வந்திருக்கிறார் சித்தார்த். சிம்பா என்கிற முக்கியமான கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசுகிறார். அதைபோல ஸ்கார் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமி டப்பிங் பேசியுள்ளார். இதற்கு முன்பு அனிமேஷனாக வெளியான ‘தி லயன் கிங்’ படத்தில் சிம்பா கதாபாத்திரத்திற்கு அரவிந்த் சாமிதான் டப்பிங் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு டப்பிங் பேச இருக்கும் தமிழ் பிரபலங்களின் லிஸ்ட்டை படக்குழு தி லயன் கிங் தமிழ் ட்ரைலரில் வெளியிட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ், ரோஹினி, சிங்கம் புலி, மனோ பாலா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.