Skip to main content

“அஞ்சான் ரீ எடிட்... பெரிய பட்ஜெட்டில் மகாபாரதம்” - லிங்குசாமியின் திட்டம்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
lingusamy paiyaa re release press meet he said anjaan also will re released

லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'பையா'. லிங்குசாமி இயக்கி தயாரித்த இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்றும் பல யுவன் ரசிகர்களின் பிளே லிஸ்ட்டில் இப்படப் பாடல்கள் இடம்பெற்று வருகிறது. 

இந்த நிலையில் பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளைக் கடந்து ஏப்ரல் 12ஆம் தேதி ரீ ரிலீஸாகவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை பேசினார் லிங்குசாமி. பையா 2 குறித்து பேசிய அவர், “ஸ்கிரிப்ட் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டது. அதற்கான நடிகர்கள் அமைந்தால் ஆரம்பித்துவிடலாம்” என்றார்.  மேலும், “ஆனந்தம், ரன், சண்டக்கோழி படங்களையும் ரீ ரிலீஸ் செய்தால் நல்லாயிருக்கும். இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களிடம் பேசவுள்ளேன்” என்றார். 

அஞ்சான் ரீ ரிலீஸ் குறித்து பேசிய அவர், “சோசியல் மீடியாவில் என்னை சோதித்த படம். எப்பவுமே ஒரு நல்ல படத்துக்கும், சுமாரான படத்துக்கும், இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருந்தால் நல்லா வந்திருக்கும் என்பது தான்  வித்தியாசமாக இருக்கும். எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் வேலை பார்த்திருந்தால் கண்டிப்பாக ஒரு நல்ல படமாக இருந்திருக்கும். அஞ்சான் படத்தை ரீ எடிட் செய்து ரீ ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது ஒரு ஆசை. நல்ல ஜாலியாக, ஈஸியாக, எளிமையாக இந்த படம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் எடுத்தேன். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறேன். அதில் எனக்கு சந்தோஷம். ஆனால் படத்தில் சில தவறுகள் இருக்கு. எடிட் பண்ண நேரமில்லை. ரிலீஸ் தேதி முடிவுபண்ணிவிட்டதால் அது பண்ண முடியாமல் போனது. அந்த நெருக்கடியால் சில தவறுகள் நடந்துவிட்டது” என்றார்.        
  
தொடர்ந்து பேசிய அவர், “படம் பண்ணாமல் இருப்பதால் சினிமாவை விட்டு விலகிவிட்டதாக பொருள் இல்லை. எதையோ தேடிக்கொண்டும், கற்றுக்கொண்டும் சினிமாவோடு பயணித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போது கூட ஒரு மிகப்பெரிய படத்துக்கான வேலை தான் போய்ட்டு இருக்கு. மகாபாரதத்தை தழுவி, அபிமன்யுவும் அர்ஜுனனையும் முதன்மை கதாபாத்திரமாக வைத்து கதை எழுதி வருகிறோம். இந்தி தயாரிப்பாளர் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார் அதன் பணிகளிலும் இருக்கிறோம். அந்தப் படம் தான் அடுத்த படமாக இருக்குமா எனத் தெரியவில்லை. நடிகர்கள் அமைந்தால் ஆரம்பித்துவிடுவோம்” என்றார்.  

சார்ந்த செய்திகள்