திரைத்துறையில் 60 ஆண்டுகளுக்கு மேலாக சகலகலாவல்லவனாக திகழ்பவர் கமல்ஹாசன். 'ராஜா கைய வெச்சா... அது ராங்கா போனதில்ல' என்ற அவரது பாடலின் வரிகளுக்கு ஏற்றது போல் இயக்குநர், பாடகர், நடன அமைப்பாளர் என கிட்டத்தட்ட அனைத்து சினிமாவின் அனைத்து பிரிவுகளிலும் பணியாற்றியவர். தமிழ் சினிமாவை இந்திய அளவில் தாண்டி உலக அளவிலும் எடுத்துச் சென்றார்.
அதனால் உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனை முடித்துவிட்டு மணிரத்னம், மகேஷ் நாராயணன், பா.ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்களுடன் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளார். இதனிடையே அ.வினோத் அல்லது வெற்றிமாறனுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அபுதாபியில் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது. சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விழா வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் நடைபெறுகிறது. திரைத்துறையில் கமல்ஹாசன் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி சார்பில் அவரை கௌரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படவுள்ளது. ஏற்கனவே இந்திய அரசால் உயரிய விருதுகளாக போற்றப்படும் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.