Skip to main content

‘புரட்சிக் கலைஞர்’ பட்டம் யார் கொடுத்தது எப்படி வந்தது? - லியாகத் அலிகான் பகிரும் நினைவுகள்

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
 Liaquat Ali Khan Shared a memory about vijaykanth

‘புரட்சிக் கலைஞர்' என்ற பட்டம் யார் கொடுத்தது எப்படி வந்தது? என்று சொல்கிறேன். கலைப்புலி தாணு சார், தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத பெயர். பிரமாண்ட தயாரிப்பாளர். விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக உயர்ந்தவர். பல வெற்றிப் படங்களைத் தயாரித்தார். இன்னும் தயாரித்துக் கொண்டிருக்கிறார். தாராள மனதுக்காரர். அவரை நான் அண்ணன் என்று அழைப்பேன். அவர் ‘தம்பி' என்று என்னை அழைப்பதிலே பாசம் மட்டுமல்ல... உரிமையும் இருக்கும். ஒருநாள் அவருடன் இப்ராகிம் ராவுத்தர், நான், விஜயகாந்த் மன்ற பொதுச் செயலாளர் மூவரும் வடசென்னைக்கு ஒரு நிகழ்ச்சிக்கு காரில் போய்க்கொண்டிருந்தோம்.

தாணு சார் விளம்பரம் பண்ணுவதில் அசத்துவார். இன்னொரு வகையில் அவர் ராசிக்காரர். ‘சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் அவர்கள்... இன்றுவரை அவர்தான் சூப்பர் ஸ்டார். ஒரே சூப்பர் ஸ்டார் அவர்தான் என்றெல்லாம் பலவித கருத்துகள் அவ்வப்போது திரையுலகில் பேசப்படும். விஜய், அஜித் படங்கள் பெரிய வெற்றி பெறும்போது, வசூலில் சாதனை படைக்கும்போதெல்லாம் சூப்பர் ஸ்டார் யார்? என்று சிலர் கருத்துக்கள் சொல்வார்கள் இருந்தாலும், சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினி சார்தான். நீடித்து நிலைத்து நிற்கும் அந்த சூப்பர் ஸ்டார் பட்டம், அவருக்கு கிடைப்பதற்குக் காரணமே கலைப்புலி தாணு சார்தான். அவர்தான் சூப்பர் ஸ்டார் என்று முதன்முதலில் விளம்பரங்களில் போட்டார்.

‘ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்’, இந்தப் பட்டமும் தாணு சார் கொடுத்ததுதான். அர்ஜுன் சாரை முதலில் ஆக்‌ஷன் கிங் என்று அழைத்தவர், விளம்பரப்படுத்தியவர் தாணு சார்தான். இது புதிய செய்தி அல்ல. எல்லோருக்கும் தெரிந்ததுதான், இருந்தாலும்  இந்த இடத்தில் சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. பட்டம் கொடுப்பதில் ராசிக்காரரான தாணு சார் அவர்களால்தான் விஜயகாந்த் அவர்கள் ‘புரட்சிக் கலைஞர்' என்று அழைக்கப்பட்டார்.

கூலிக்காரன் படம் விஜயகாந்த் அவர்களை வைத்து பிரம்மாண்டமாக தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படம் ரிலீஸாவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அப்பொழுதுதான் தாணு சாருடன் வடசென்னை நிகழ்ச்சிக்கு நாங்கள் போய்க்கொண்டிருந்தோம்.

தாணு சார் சொன்னார்: "இப்ராகிம் சார், விஜி சாருக்கு டைட்டில் போடறதுக்கு ஒரு யோசனை பண்ணி வச்சிருக்கேன்... சொல்லவா சார்.'' 
"சொல்லுங்க சார்.'' 
"புரட்சிக் கலைஞர் விஜயகாந்த்...'' 
சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தார். எங்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்துவிட்டுச் சொன்னார்.

"எம்.ஜி.ஆரிடம் இருந்து புரட்சியை எடுத்துக்கிட்டேன். அதோட கலைஞரை சேர்த்துட்டேன்... எப்படி சார்?'' என்றார். தாணு சார், கலைஞர் அவர்களிடத்தில் நெருக்கமானவராகவும் அவருக்கு மிகவும் பிடித்தமானவராகவும் இருந்தார்.

"சூப்பர் சார்'' என்றார் இப்ராகிம் ராவுத்தர்.
"லியாகத் எப்படி இருக்கு?'' 
"அருமையா இருக்கு அண்ணே... உங்க ராசி ‘புரட்சிக் கலைஞர்'ங்கிற இந்தப் பேரு அவருக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா நிலைச்சு நிற்கும்ணே'' என்றேன் நான். அதேபோல் நிலைத்தது.

திரைப்பட நிகழ்ச்சிகளில் விஜயகாந்த் மன்ற திறப்பு விழா நிகழ்ச்சிகளில், விஜயகாந்த் பிறந்தநாள் விழாக்களில் நான் எத்தனை ஆயிரம் முறை சொல்லியிருப்பேன் என்று கணக்கே இல்லை. என் வாழ்க்கையில் நான் அதிகமாக உச்சரித்த வார்த்தைகளில், என் உணர்வுகளோடு கலந்துவிட்ட வார்த்தை ‘புரட்சிக் கலைஞர்.' இப்படிப்பட்ட பெருமைகளுக்கு பிள்ளையார் சுழி போட்ட படம், சட்டம் ஒரு இருட்டறை.

சார்ந்த செய்திகள்