லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவரது இசையில் 2 பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டிருந்து பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையானது. அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சமூக வலைத்தளங்களில் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. யூட்யூப் தளத்தில் வெளியாகியுள்ள இந்த ட்ரைலரை சில திரையரங்குகள் தங்களது திரையிலும் திரையிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை ரோகிணி திரையரங்கில் டிக்கெட் கொடுக்கும் இடத்திற்கு அருகில் வெளித்தோற்றத்தில் ட்ரைலரை திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. அதற்குக் காவல்துறை அனுமதி தர மறுத்ததால் திரையரங்கின் உள் பெரிய திரையில் திரையிடப்பட்டது. அதற்காக ஏராளமான விஜய் ரசிகர்கள் அங்கு கூடினர்.
இந்த நிலையில், ட்ரைலரை பார்க்க ஆர்வமாகக் காத்திருந்த ரசிகர்கள் உள்ளே செல்வதற்கு முற்பட்டபோது அங்கிருந்த தடுப்புச் சுவர்களைத் தள்ளிவிட்டு ஓடினர். அப்போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் கூட்ட நெரிசலால் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். உடனே அங்கிருந்த மற்ற ரசிகர்கள் அவரை ஆற்றுப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதே திரையரங்கில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு பட முதல் நாள் காட்சி கொண்டாட்டத்தின் போது ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.