
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா (NASA) சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு 8 நாள் இருந்து ஆய்வு மேற்கொண்டு திருப்பி வந்துவிட திட்டமிட்டிருந்தது. ஆனால் இவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் அவர்கள் அங்கேயே தங்கும் சூழல் ஏற்பட்டது.
சுமார் 9 மாதங்களாக இருவரும் விண்வெளியில் தங்கினர். பல்வேறு இடையூறுகள் மற்றும் தாமதங்களுக்கு பிறகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் இன்று அதிகாலை பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இந்த நிலையில் சுனிதா வில்லியம்ஸுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் திரை பிரபலங்களில் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி, தனது எக்ஸ் பக்கத்தில், “சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்பியதை வரவேற்கிறேன். வரலாறு மிக்க மற்றும் வீரமான திரும்புதல் இது. 8 நாட்கள் விண்வெளிக்குச் சென்று, 286 நாட்களுக்குப் பிறகு பூமியைச் சுற்றி 4577 சுற்றுப்பாதைகளுக்குப் பிறகு திரும்பியுள்ளார். உங்களின் வாழ்க்கை கதை முற்றிலும் பதட்டமானது, நம்பமுடியாத அளவிற்கு த்ரில்லரானது மற்றும் இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவு சாகசமுடையது. அது ஒரு உண்மையான பிளாக் பிளாக்பஸ்டர். அவர்களை மீண்டும் கொண்டு வந்ததற்காக ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா ஆராய்ச்சிக் குழுவிற்கு வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே மாதவன், “பூமிக்கு மீண்டும் வாருங்கள் எங்கள் அன்புள்ள சுனிதா வில்லியம்ஸ். எங்கள் பிரார்த்தனைகள் நிறைவேறியுள்ளன. நீங்கள் பாதுகாப்பாகவும் புன்னகையுடனும் இருப்பதை பார்க்கும் போது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்பேஸில் 260க்கும் மேற்பட்ட பதட்டமான நாட்களுக்குக் கடவுளின் ஆசீர்வாதத்தாலும் மில்லியன் கணக்கான மக்களின் வேண்டுதலாலும் பதில் கிடைத்துள்ளது” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.