Skip to main content

தொடரும் விருது வேட்டை - ரஷ்யாவில் ஒலித்த தமிழ் குரல் 

Published on 23/09/2024 | Edited on 23/09/2024
kottukkali director ps vinoth raj speak tamil in russia award

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் ‘கொட்டுக்காளி’. இப்படத்தை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியிருந்தார். படத்தில் பின்னணி இசை இல்லாமல் லைவ் ரெக்கார்டுடன் உருவாக்கப்பட்ட இந்த படம் கமல், வெற்றிமாறன், மிஷ்கின் உள்ளிட்ட முன்னணி திரை பிரபலங்களின் பாராட்டை பெற்றது. 

இதனால் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பே பல சர்வதேச திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்றது.  அந்த வகையில் ஜெர்மனி, கனடா, போர்ச்சுக்கல், ஆர்மீனியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை வென்று சாதனை படைத்தது. 

இந்த நிலையில் கொட்டுக்காளி திரைப்படம் மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் விருது பெற்றுள்ளது. அதன் படி ரஷ்யாவில் நடந்த 22வது ‘Amur Autumn’ என்ற திரைப்பட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ்(Grand Prix) பிரிவில் விருது வென்றுள்ளது. இந்த விருதை பெற்றுக் கொண்ட வினோத் ராஜ் மேடையில் தமிழில் பேசி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   

வினோத் ராஜ் பேசியதாவது, “நான் என்னுடைய தாய்மொழியில் சில வார்த்தைகளை பேச விரும்புகிறேன்” என ஆங்கிலத்தில் தனது விருப்பத்தை கூறிய அவர், “இது ரொம்ப முக்கியமான நேரத்தில் எனக்கு கிடைக்கும் விருது. இந்த படத்தை தயாரித்த சிவகார்த்திகேயன் அண்ணா, இணைந்து தயாரித்த கலை அண்ணா, என்னுடைய புரொடக்‌ஷன் டீம், படத்தில் நடித்த சூரி, அன்னா பென் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எந்த சூழ்நிலையிலும் என்னைவிட்டுப் போகாத என்னுடைய குடும்பம், என் மனைவி, என் பையன் எல்லோருக்கும் இந்த விருது ஒரு உற்சாகத்தை தரும்” என்று அவர் கூறும்போது அரங்கத்தில் கரகோஷங்கள் எழும்பியது. இந்த படத்தில் தனது குடும்பத்தினரை வினோத் ராஜ் நடிக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்