கௌஸ்துப் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஆலம்பனா. இப்படம் இன்று (15.12.2023) வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படத்தில் கேஜேஆர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. அதே சமயம் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும் கேஜேஆர் ஸ்டூடியோஸ் வெளியிடுகிறது. உப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு 12 ஆம் தேதி வெளியாகிறது.
அயலான் படத்திற்காக ஆர்.டி. ராஜாவின் 24 ஏ.எம். ஸ்டூடியோஸ், டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.10 கோடி கடனாகப் பெற்றிருந்தது. இந்தக் கடனை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ஏற்றுக்கொண்டு, ரூ. 3 கோடி திருப்பி செலுத்தியது. மீதமுள்ள தொகையை அயலான் அல்லது வேறு எந்த படத்தை வெளியிடுவதாக இருந்தாலும் அதன் வெளியீட்டுக்கு முன்பு திருப்பித் தருவதாக 2021ல் ஒப்பந்தம் செய்து கொண்டது.
இதையடுத்து மீதமுள்ள பணத்தை திருப்பித் தராமல் ஆலம்பனா மற்றும் அயலான் படத்தையும் வெளியிடத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் இரண்டு படங்களையும் நான்கு வாரங்களுக்கு வெளியிடத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த மனுவுக்கு, கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.
இந்நிலையில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், இன்று வெளியாகவிருந்த 'ஆலம்பனா' திரைப்படத்தின் வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கௌஸ்துப் என்டேர்டைன்மெண்ட் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆலம்பனா' படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்கிற தகவலை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அறிவித்த தேதியில் திரைப்படத்தை வெளியிட அர்ப்பணிப்புடன் நாங்கள் முயற்சித்த போதிலும், எதிர்பாராத சில சூழ்நிலைகள் எங்களின் பலத்திற்கும் அப்பாற்பட்டு இருக்கிறது. எனவே, இந்த தவிர்க்க முடியாத சூழலால் திரைப்படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தவிர்க்க முடியாத சூழல் காரணமாக எங்களின் பார்வையாளர்கள், திரைப்பட வெளியீட்டாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்கள்.