'கே.ஜி.எஃப்' படம் மூலம் பிரபலமடைந்த நடிகர் கிருஷ்ணா ஜி.ராவ் காலமானார். யஷ் நடிப்பில் வெளியான 'கே.ஜி.எஃப் 1' மற்றும் 'கே.ஜி.எஃப் 2' படங்களில் கண் தெரியாத முதியவர் கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தார். திரைத்துறையில் பல தசாப்தங்களாக உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் பல படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார்.
'கே.ஜி.எஃப் 1' படப் புகழுக்குப் பிறகு 30-க்கும் மேற்பட்ட படங்களில் கிருஷ்ணா ஜி.ராவ் நடித்துள்ளார். மேலும், 'கே.ஜி.எஃப் தாத்தா' என்றே பலரும் அழைத்து வந்தனர். இவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'நானோ நாராயணப்பா' படத்தின் ட்ரைலர் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. அதில் கூட 'கே.ஜி.எஃப் தாத்தா' என்று தான் படக்குழு குறிப்பிட்டுள்ளார்கள். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இதனிடையே நுரையீரல் பாதிப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அண்மையில் அனுமதிக்கப்பட்டு ஐசியூ-வில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்துள்ளார். இவரது மறைவு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கிருஷ்ணா ஜி.ராவ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.