நடிகர் கருணாஸின் மகன் என்கிற அடையாளத்தையும் தாண்டி அசுரன் படத்தில் தனுஷின் மகனாக ஒரு கலக்கு கலக்கிய நடிகர் கென் கருணாஸ், தற்போது வாத்தி படத்திலும் கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக ஒரு ஜாலியான சந்திப்பு நடைபெற்றது. அதில் அவர் பேசியது பின்வருமாறு...
சினிமாவில் நடிக்கும்போது என்னுடைய கேரக்டர் பற்றிய சிந்தனை மட்டும் தான் எனக்கு இருக்கும். வீட்டில் யாருக்கும் கால் செய்து கூட பேச மாட்டேன். இதனால் அம்மாவோடு அடிக்கடி எனக்கு சண்டை நடக்கும். படக்குழுவோடு மிகவும் ஒன்றிவிடுவேன். தனுஷ் சாரிடம் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு இயக்குநரிடமும் ஒவ்வொன்றைக் கற்றுக்கொள்ளலாம். வாத்தி படத்தில் முதலில் நான் ஒரு உதவி இயக்குநர் தான். அதன் பிறகு தான் நடிக்கும் வாய்ப்பு வந்தது. என்ன கேரக்டர் என்று கூட எனக்கு அப்போது தெரியாது.
வாத்தி படத்தில் உதவி இயக்குநராக என்னைப் பணியாற்றச் சொன்னது தனுஷ் சார் தான். அதன் மூலம் நடிக்கவும் எனக்கு வாய்ப்புகள் வரும் என்று கூறினார். அவர் சொன்னது போலவே நடந்தது. தமிழ், தெலுங்கு என்று எந்த மொழியாக இருந்தாலும் நடிக்க நான் தயாராக இருக்கிறேன். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் போதும். அசுரனுக்குப் பிறகு அதைப் போலவே நல்ல கேரக்டர்கள் செய்ய வேண்டும் என்கிற பயத்தில் தான் அதன் பிறகு நான் அதிகம் நடிக்கவில்லை. இந்த விஷயத்தில் அப்பா எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருக்கிறார்.
வெற்றிமாறன் சார், தனுஷ் சாரின் ஆலோசனைகளும் எனக்கு இருக்கின்றன. அசுரன், வாத்தி என்று நான் நடித்த இரண்டு படங்களும் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துபவை. அசுரன் போலவே வாத்தி படத்திலும் என்னுடைய கேரக்டர் நன்றாக இருக்கிறது. வாத்தி படத்தில் நடிக்கும்போது முதலில் கஷ்டப்பட்டேன். ஆனால் இன்று இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் என்னைப் பாராட்டும் அளவுக்கு நடித்திருக்கிறேன் என்று நினைக்கும்போது சந்தோஷமாக இருக்கிறது.
தனுஷ் சாரோடு திருச்சிற்றம்பலம் படத்தில் அசிஸ்டண்ட்டாகப் பணியாற்றினேன். வாத்தி படத்திலும் நடித்திருக்கிறேன். நடிப்பில் எத்தனை வகைகள் இருக்கின்றன என்பதை அவர் மூலம் தான் நான் கற்றுக்கொண்டேன். நேரம் தவறாமை, அனைவரையும் சமமாக மதிப்பது என்று அவரிடம் வியந்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வெற்றிமாறன் சார் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ஆடுகளம். அந்தப் படம் வெளிவந்தபோது நான் ரொம்ப சின்ன பையன். ஆனாலும் அப்போதே என்னை மிகவும் ஈர்த்த படம் அது.
வெற்றிமாறன் சார், தனுஷ் சாரோடு பணியாற்றும்போது இயக்குநர் மற்றும் உதவி இயக்குநரின் கஷ்டங்கள் புரிந்தன. ஒரு படம் செய்வது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது. அப்பா கருணாஸ் அசுரன் படத்தில் என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு நான் உன்னை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன் என்று என்னைப் பாராட்டினார். அவர் பொதுவாக இன்னும் கொஞ்சம் சிரிக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஜோக் சொன்னால் கூட சிரிக்க மாட்டார். இப்போது அது கொஞ்சம் மாறியிருக்கிறது.
நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. நல்ல நடிகன் என்று பெயர் வாங்க வேண்டும் என்பதுதான் இப்போதைய ஆசை. இயக்கம் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். தற்போது என்னுடைய முழு கவனமும் நடிப்பில் தான் இருக்கிறது.