'நடிகையர் திலகம்' படத்தின் வெற்றி மூலம் தன் மார்க்கெட்டை உச்சத்தில் வைத்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது முன்னணி நாயகர்கள் படங்களான சர்கார், சண்டக்கோழி 2, சாமி 2 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தடுத்து படங்கள் வெற்றிபெற்றதனால் சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்று வந்த செய்திகளுக்கு விளக்கம் அளித்து கீர்த்தி பேசும்போது.... "எனக்கு பணம் தேவை இல்லை. கதைதான் முக்கியம். எந்த துறையானாலும் வாய்ப்பு இருக்கும்போது பயன்படுத்தி நிறைய சம்பாதித்து விட வேண்டும் என்று சொல்வார்கள். மார்க்கெட் இருக்கும்போது நடிகைகள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்றும் சொல்வது உண்டு.
நான் அப்படிப்பட்ட ரகம் இல்லை. எனக்கு பணம் முக்கியம் இல்லை. ஒரே நேரத்தில் உச்சத்துக்கு வரவேண்டும். கோடிகோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது. பெயர், புகழ், பணம் சம்பாதிப்பதை விட நல்ல கதைகளில் நடித்தேன் என்று பெயர் வாங்கவே விரும்புகிறேன். சம்பளத்தை உயர்த்த மாட்டேன். தெலுங்கில் நான் நடித்த மூன்று படங்கள் வெற்றி பெற்றன. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் சாவித்திரி வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படமும் பெயர், புகழ் சம்பாதித்து கொடுத்தது. இரண்டு மொழிகளிலும் எனக்கு இப்போது நிலையான இடம் கிடைத்து விட்டது. அதிக படங்களில் நடிப்பதை விட குறைவான படங்களாக இருந்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்தோம் என்பதில்தான் பெருமை இருக்கிறது" என்றார்.