53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்த்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என வெளிப்படையாக விமர்சனம் செய்தார்.
இவரது பேச்சு பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாகப் பலரும் படத்திற்கு ஆதரவாகவும் நடாவ் லேபிட் பேச்சிற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வகையில் அரசியல் கட்சிகள் சிவசேனா, காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் நடாவ் லேபிட்டிற்கு ஆதரவாகவும், பாஜகவை சார்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் பேசினர். இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், முதலில் நடாவ் லேபிட் பேச்சிற்குக் கண்டனம் தெரிவித்தும் பிறகு மன்னிப்பு கேட்டும் இருந்தார்.
இந்நிலையில் நடாவ் லேபிட் இந்த சர்ச்சை தொடர்பாக ஒரு ஆங்கில ஊடகத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "யாரையும் நான் அவமதிக்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்டவர்களோ அல்லது அவர்களது உறவினர்களையோ அவமதிக்கும் நோக்கில் நான் அதைச் சொல்லவில்லை. அவர்கள் இவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் நான் முற்றிலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "என் வார்த்தைகள் புரிந்துகொள்ளப்பட்ட விதம் வருத்தமளிக்கிறது. நான் அங்கு பேசியது என் கருத்து மட்டுமல்ல. உடன் இருந்த நடுவர்களின் எண்ண ஓட்டங்களையும் பிரதிபலிப்பதாகவே பேசினேன்" எனக் கூறியுள்ளார்.