53வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விழாவில் திரையிடப்பட்ட ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் குறித்து தேர்வுக்குழு தலைவர் நடாவ் லேபிட், "தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் தயாரிக்கப்பட்ட திரைப்படம். மிகவும் கெளரவமான இதுபோன்ற சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற திரைப்படத்தைப் பார்த்தது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த எங்கள் அனைவருக்கும் மன உளைச்சலையும் தந்துள்ளது" என வெளிப்படையாக விமர்சனம் செய்தார்.
கடந்த மார்ச் மாதம் வெளியான இப்படம் 1980 மற்றும் 90களில் காஷ்மீர் கிளர்ச்சி சமயத்தில் காஷ்மீரி பண்டிட்டுகள் காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்பட்டதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது. இருப்பினும் படம் வெளியான பிறகு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மக்களிடையே வெறுப்பு உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இப்போது நடாவ் லேபிட் பேச்சால் மீண்டும் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. பலரும் இவரின் பேச்சிற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்படத்தில் நடித்துள்ள அனுபம் கெர், "பொய் எவ்வளவு பிரமாண்டமானதாக இருந்தாலும் அது வீழ்ந்துவிடும். உண்மையின் முன்னால் அது தாக்குப் பிடிக்காது" என்று பதிவிட்டிருந்தார். மேலும் செய்தியாளர்களிடம் "இது வெட்கக்கேடானது. எல்லாமே திட்டமிட்டு நடந்துள்ளது. இது தொடர்பாக எங்கள் குழு கலந்தாலோசித்து வருகிறது. விரைவில் இது தொடர்பாகத் தகுந்த பதிலளிப்போம்" எனப் பேசினார். இப்படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "உண்மை எப்போதும் பேராபத்தானது. அது சிலரைப் பொய் பேச வைத்துவிடும்" என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது தொடர்பாக சிவசேனா கட்சி நடாவ் லேபிட்டிற்கு ஆதரவாகப் பேசியுள்ளது. கட்சியின் முக்கிய தலைவர் சஞ்சய் ரவுத் பேசுகையில், "இது தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பற்றிய சரியான விமர்சனம்தான். ஒரு கட்சிக்கு எதிராக இன்னொரு கட்சி இந்தப் படத்தை வைத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. ஆனால், காஷ்மீரில் உண்மையிலேயே பண்டிட்டுகள் கொலை இந்தப் படத்திற்குப் பின்னர்தான் அதிகரித்தது. இந்தப் படம் வெளியான பின்னரே காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்படுவதும் அதிகரித்தது” எனத் தெரிவித்துள்ளார். சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி தனது ட்விட்டர் பக்கத்தில், "காஷ்மீரி பண்டிட்டுகள் பாதிக்கப்பட்டது. அவர்களின் நீதிக்கான பிரச்சனை. இது அவசியம் கேட்க வேண்டிய பகுதி" எனப் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனடே கூறுகையில், “பிரதமர் மோடி, பாஜக என அனைவரும் இந்தப் படத்தை புரோமோட் செய்தனர். ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வுக்குழு தலைவர் படத்தை நிராகரித்து இது மோசமான பிரச்சார திரைப்படம். இது மாதிரியான திரைப்பட விழாக்களில் திரையிடத் தகுதியற்றது என்று கூறியுள்ளார். நீங்கள் விதைத்த வெறுப்பு இப்படித்தான் வெளிவரும்” என்று கூறியுள்ளார்.
பாஜகவின் ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா, “தி காஷ்மீரி ஃபைல்ஸ் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம் லேபிட், ஹோலோகாஸ்ட் திரைப்படத்தையும் எதிர்க்கிறார் என்றே அர்த்தம். ஹோலோகாஸ்ட், ஸ்க்லிண்டர்ஸ் லிஸ்ட் படங்களை நீண்டகாலமாக மக்கள் பிரச்சாரம் என்றே புறக்கணித்து வந்தனர். இப்போது அதேதான் காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு நடக்கிறது. உண்மை நிச்சயம் வெல்லும்” எனப் பேசியுள்ளார்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக இஸ்ரேல் தூதர் நவோர் கிலோன், “நடாவ் லேபிடுக்கு ஒரு திறந்த மடல். நடாவ், நீங்கள் வெட்கப்பட வேண்டும். இந்தியக் கலாச்சாரத்தில் விருந்தினரைக் கடவுளுடன் ஒப்பிடுவர். ஆனால், அதனை நீங்கள் எவ்வளவு மோசமாகச் சிதைக்க முடியுமோ அவ்வளவு மோசமாகச் சிதைத்துள்ளீர்கள். உங்களை கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவின் தேர்வுக் குழுத் தலைவராக அழைத்துள்ளார்கள். அவர்கள் உங்களுக்கு அளித்த மரியாதையை அவர்கள் உங்கள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை சிதைத்துள்ளீர்கள்" எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.