தமிழ்த் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைந்து பணியாற்றியிருக்கும் ‘நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதியன்று (இன்று) 190 நாடுகளில் வெளியாகிறது. மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சரியம் ஆகிய உணர்வுகளை மையமாகக் கொண்டு ஒன்பது பகுதிகளாக உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் க்யூப் சினிமா டெக்னாலஜீஸ் இணைந்து தயாரித்துள்ளன. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இப்படத்தில் அமைதியை முன்வைத்து ‘பீஸ்’ என்ற பகுதியை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து கார்த்திக் சுப்பாராஜ் கூறுகையில், "இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனை கல்லூரி நாட்களில் இருந்தே எனக்குத் தெரியும். ஒரு திரைப்பட இயக்குநராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு நடிகராக, இப்போதுதான் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளதாக என்னிடம் கூறினார். அதனால் இப்படத்தில் எனக்கு என்ன வேண்டும் என்பதையும், அவர் எப்படி நடிக்க வேண்டும் என்பதையும் அவரிடம் தெளிவாகச் சொன்னேன்.
நாங்கள் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தினோம். கடைசி நாளில், படப்பிடிப்பு மிகவும் அழுத்தமாக இருந்தது. ஏனென்றால், படப்பிடிப்பை சீக்கிரம் முடிக்க வேண்டியிருந்தது. அவர் சிறந்த திரைப்பட இயக்குநர் என்பதால் இந்த அழுத்தங்களைப் புரிந்துகொண்டு மிகச் சிறப்பான ஒத்துழைப்பைத் தந்தார். படத்தின் முதல் பிரதியை மிகவும் ரசித்தார். அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பாபி சிம்ஹா இருவரும் திரைக்கதை விவாதத்தின்போது மிகச்சிறந்த நண்பர்களாக மாறிவிட்டனர். படத்தில் இருவரும் சேர்ந்து வருவதுபோல் நிறைய காட்சிகள் உள்ளன. இருவருக்குமிடையே படப்பிடிப்பில் உணர்வுப்பூர்வமான உறவு ஏற்பட்டுவிட்டது. படத்திலும் அது மிகச்சிறப்பாக வந்திருக்கிறது'' எனக் கூறினார்.