சிறுத்தை சிவா - சூர்யா கூட்டணியில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த கங்குவா படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 14 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியானது. இப்படத்தை பெரும் பொருட்செலவில் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பதானி மற்றும் பாபி தியோல் இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகியிருந்தனர். இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, கே.எஸ் ரவிகுமார், கருணாஸ், கோவை சரளா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
தேவி ஸ்ரீ இசையமைத்திருந்த இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 2டி மற்றும் 3டியில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக படம் முழுக்க அதிக சத்தம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி, “பார்வையாளர்கள் தலை வலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” என தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக எழுந்த விமர்சனத்திற்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, திரையரங்க உரிமையளர்களுக்கு சத்தத்தின் அளவை 2 புள்ளிகள் குறைக்க அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து ஜோதிகா, கங்குவா திரைப்படத்தில் உள்ள நல்ல விஷயங்களை விமர்சகர்கள் கவனிக்காமல் விட்டது ஏன் என்றும் படத்தைப் பற்றி வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள் என்றும் தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதையடுத்து தனி நபர் தாக்குதல் அவசியமற்றது என நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் சீனு இராமாசாமி, சுசீந்திரன் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கங்குவா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 8ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.