
கடந்த ஜூன் 14ஆம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பல சர்ச்சைகள் எழுந்தது. நெபோடிஸம் குறித்தும், பாலிவுட்டில் நடைபெறும் அரசியல் குறித்தும் சமூக ஊடகங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது. மேலும் இதற்கெல்லாம் காரணம் சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்டோர்தான் என்று நடிகை கங்கனா ரனாவத் குற்றச்சாட்டு வைத்தார்.
மேலும் சுஷாந்த் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், சஞ்சய் லீலா பன்ஸாலி, ஆதித்யா சோப்ரா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா, கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி அபூர்வா மேத்தா உள்ளிட்டோருக்கு மும்பை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உறுதி செய்துள்ளார். அதில், ''இன்னும் ஓரிரண்டு நாட்களில் சுஷாந்த் தற்கொலை தொடர்பான வழக்கில், மகேஷ் பட்டின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்யவுள்ளனர். நடிகை கங்கனாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவன தலைமை நிர்வாக அதிகாரிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கரண் ஜோஹருக்கு சம்மன் அனுப்பப்படும்” என்று தெரிவித்துள்ளார்.