'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரிஷப் ஷெட்டி நடித்து இயக்கியுள்ள கன்னடப் படம் 'காந்தாரா' சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த 15ஆம் தேதி வெளியானது. இப்படத்தைப் பார்த்த திரை பிரபலங்களும், சினிமா விமர்சகர்களும் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் 'காந்தாரா' படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் " அடுத்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக ‘காந்தாரா’ இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இந்த ஆண்டு இன்னும் முடியவில்லை. இன்னும் சிறந்த படங்கள் வரக்கூடும் என்பது எனக்குத் தெரியும். ஆனால் ஆஸ்கார் விருதை விட இந்தியாவுக்கு உலகளவில் சரியான பிரதிநிதித்துவம் தேவை.
மர்மங்கள் பல நிறைந்த இந்த பூமியை ஒருவரால் புரிந்துகொள்ள முடியாது. அதனை ஏற்றுக் கொள்ளத்தான் முடியும். இந்தியா ஒரு அதிசயம் போன்றது...அதை உணர நீங்கள் முயற்சி செய்தால் விரக்திதான் ஏற்படும். ஆனால் அந்த அதிசயத்தை ஏற்றுக்கொண்டால் அதில் நீங்களும் ஒன்றாக இருக்கலாம். காந்தாரா ஒரு உண்மையை வெளிப்படுத்தக் கூடிய படம். உலகத்தில் உள்ள மக்கள் கண்டிப்பாக கண்டுகளிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தனுஷ் இப்படத்தை பார்த்து, பிரம்மிப்பாக இருந்தது. கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என பாராட்டியிருந்தார். சிம்பு படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு கேக் அனுப்பி தனது பாராட்டை தெரிவித்திருந்தார். மேலும் கார்த்தி, ரிஷப் ஷெட்டியை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.