பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் மஹாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சியையும் குறை கூற ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, கங்கனாவின் அலுவலகம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டுப்பட்டிருப்பதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இடித்துத் தகர்க்கப்பட்டது.
இந்த விவகராம் தொடர்பாக தனது சொந்த ஊர் மணாலியில் இருந்து மும்பை வந்தார். தற்போது மஹாராஷ்ட்ரா ஆளுநரிடம் தனது தரப்பு நியாயத்தை தெரிவித்துவிட்டதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
மேலும், மும்பையிலிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார் கங்கனா. இதுகுறித்து அவர் ட்விட்டரில் கூறுகையில், “கனத்த இதயத்தோடு மும்பையை விட்டுச் செல்கிறேன். இவ்வளவு நாட்கள் தொடர்ந்து என் மீது நடந்த தாக்குதல், அதில் நான் அச்சப்பட்டது, என்னை நோக்கி வீசப்பட்ட அவதூறுகள், என் அலுவலகம் மற்றும் என் வீட்டை இடிக்க நடந்த முயற்சிகள், என்னைச் சுற்றி ஆயுதத்தோடு இருந்த பாதுகாவலர்கள், எல்லாவற்றையும் பார்க்கும்போது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்கிற எனது ஒப்பீடு மிகச் சரியானது என்றே சொல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.