இயக்குநர் ஏ.எல். விஜய், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி திரைப்படம் எடுத்துள்ளார். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவுபெற்றதையடுத்து, படத்தை ஏப்ரல் 23ஆம் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு, அதற்கான முன்னோட்டமாக படத்தின் ட்ரைலரையும் வெளியிட்டது.
திடீரென ஏற்பட்ட கரோனா இரண்டாம் அலை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தைத் திட்டமிட்டபடி திரைக்கு கொண்டுவருவதில் சிக்கல் எழுந்தது. இந்த நிலையில், ‘தலைவி’ திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது. இதனை மறுத்த படக்குழு, ‘தலைவி’ திரைப்படம் நேரடி திரையரங்க வெளியீடாகத்தான் இருக்கும் என உறுதியளித்தது.
இந்நிலையில், ‘தலைவி’ திரைப்படம் அடுத்த மாதத்தின் மத்தியில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் ஒன்று கடந்த சில தினங்களாக சமூகவலைதளங்களில் பரவிவந்தது. இதனை மறுத்துள்ள நடிகை கங்கனா ரணாவத், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "‘தலைவி’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து எந்தத் தேதியும் தற்போதுவரை இறுதி செய்யப்படவில்லை. வதந்திகளிடம் இருந்து விலகியிருங்கள். நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்படும்போது ‘தலைவி’ படத்தை வெளியிடுவோம். நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.