ஒரு வழியாக ஷாருக்கானின் 'பதான்' படம், காவி சர்ச்சையில் இருந்து கடந்து வந்து தற்போது திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் ரூ.219.6 கோடியை ஈட்டியுள்ளது.
முன்னதாக படம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த பல தலைவர்கள் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அவர்களை திரைப்படங்கள் குறித்து யாரும் கருத்து கூற வேண்டாம் என பிரதமர் மோடி வலியுறுத்தியதாக ஒரு தகவல் வெளியானது. பின்பு படத்தை எதிர்த்த விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர், “பதான் படத்தில் செய்த மாற்றங்களால் மகிழ்ச்சியில் உள்ளோம். இதனால், போராட்டம் நடத்தும் முடிவை வாபஸ் பெறுகிறோம்” எனத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படம் குறித்து நடிகை கங்கனா ரணாவத் தனது கருத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "பதான் திரைப்படம் வெறுப்பின் மீதான அன்பின் வெற்றி என்று சொல்பவர்களின் கூற்றை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், யார் வெறுப்பின் மீதான யாருடைய அன்பு? என்பதை ஆராய வேண்டும். யார் டிக்கெட்டுகளை வாங்கி படத்தை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள்? 80 விழுக்காடு இந்துக்கள் வசிக்கும் இந்திய நாட்டில், அனைவரின் அன்பை உள்ளடக்கியது தான் பதான் படம்.
நமது எதிரி நாடான பாகிஸ்தானும், ஐஎஸ்ஐயும் நல்ல முறையில் இருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது தான் படத்தின் வெற்றிக்கு காரணம். வெறுப்பு மற்றும் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் இந்த மனநிலைதான் மிகவும் பெரிது. வெறுப்பையும், எதிரிகளின் அற்ப அரசியலையும் வென்றது இந்தியாவின் அன்பு.
இந்திய முஸ்லிம்கள் தேசபக்தர்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வித்தியாசமானவர்கள். இதன் முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக இருக்காது, ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும், எனவே அதன் கதைக்களத்தின்படி பதான் திரைப்படத்திற்கு பொருத்தமான பெயர் இந்தியன் பதான் என்பது தான்" என குறிப்பிட்டுள்ளார்.