
பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்த ‘எமர்ஜென்சி’ படம் கடந்த ஜனவரி 17ஆம் தேதி வெளியானது. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்திருந்தார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த இப்படம் மோசமான வரவேற்பை பெற்றது.
இப்படம் ரிலீஸுக்கு முன்பும் பின்பும் பல சிக்கல்களை சந்தித்தது. படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இப்படம் இருப்பதாக எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் பிரச்சனை நீடித்தது. அது கோர்ட் வரை சென்று பின்பு முடிவுக்கு வந்தது. பின்பு படம் வெளியான சமயத்தில் பஞ்சாபில் தடை செய்ய வேண்டும் என சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவில் இப்படி இருக்க இங்கிலாந்திலும் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. காலிஸ்தான் பிரிவினை அமைப்புகள் இப்படம் சீக்கியர்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். மேலும் அங்கு ஒரு திரையரங்கில் வந்த காலிஸ்தான் பிரிவினை வாத அமைப்பினர் முகமூடியுடன் உள்ளே நுழைந்து மிரட்டினர்.
இந்த நிலையில் இப்படம் சமீபத்தில் நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் பார்த்த ரசிகர்கள் தற்போது படம் குறித்து தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ரசிகை ஒருவர், “ஆஸ்கருக்கு இந்த படம் இந்தியாவில் இருந்து செல்ல வேண்டும். கங்கனா என்ன ஒரு படம்!” எனப் பதிவிட்டிருந்தார். அவரது பதிவிற்கு கங்கனா ரனாவத் பதிலளித்துள்ளார். அந்த பதிலில், “அமெரிக்கா அதன் உண்மை முகம் காட்ட விரும்பவில்லை. அவர்கள் வளரும் நாடுகளை எப்படி மிரட்டுகிறார்கள், அடக்குகிறார்கள், ஆயுதம் ஏந்துகிறார்கள் என்பதை எமெர்ஜன்சி படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சில்லி விருதான ஆஸ்கரை அவர்களே வைத்துக் கொள்ளட்டும். நம்மிடம் தேசிய விருதுகள் இருக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார். கங்கனா இதுவரை நான்கு தேசிய விருதுகள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.