கடந்த ஜூன் 14ஆம் தேதி பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டார். தற்போது இவரது மரணம் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றது. சுஷாந்தின் காதலி ரியா மீது தீவிரமான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகை ரியா மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நார்காட்டிக்ஸ் பீரோவுக்கு உதவ மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் ட்வீட் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத். அதில்...
''பாலிவுட் உலகின் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கொக்கைன்தான். கிட்டத்தட்ட எல்லா ஹவுஸ் பார்ட்டிகளிலும் அது தாராளமாகப் பயன்படுத்தப்படுகிறது. அது விலையுயர்ந்த போதைப்பொருள்தான். ஆனால், பெரிய நடிகர்களின் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளுக்குச் சென்றால் தொடக்கத்தில் உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும். எம்.டி.எம்.ஏ படிகங்கள் தண்ணீரில் கலக்கப்பட்டு, சில நேரம் உங்களுக்குத் தெரியாமலே உங்களுக்குள் செலுத்தப்படும். போதைப்பொருள் தடுப்பு போலீஸாருக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். ஆனால், எனக்கு மத்திய அரசின் பாதுகாப்பு வேண்டும். இதனால், என் தொழிலுக்கு மட்டுமல்ல என் உயிருக்கேகூட ஆபத்து நேரலாம். சுஷாந்துக்கு சில கோர உண்மைகள் தெரிந்ததாலேயே அவர் கொல்லப்பட்டார்.
மேலும், போதைப்பொருள் தடுப்பு போலீஸார் பாலிவுட்டுக்குள் நுழைந்தால் பெரும் பிரபலங்கள் பலர் சிறைக்குச் செல்வார்கள். அவர்களுக்கு ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிவரும். பாலிவுட் என்ற சாக்கடையைத் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடி சுத்தம் செய்வார் என்று நம்புகிறேன். நான் மைனர் பெண்ணாக இருந்தபோது என்னுடைய வழிகாட்டியாக இருந்த ஒருவர் என்னுடைய குளிர்பானங்களில் போதைப் பொருளை எனக்குத் தெரியாமல் கலந்து கொடுத்துவிடுவார். ஆனால், நான் பிரபலமானதும் பெரிய படங்களின் பார்ட்டிகளுக்குச் சென்றபோது அங்கு ஒரு போதைப்பொருள் மற்றும் மாஃபியா உலகம் இயங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்'' என பதிவிட்டுள்ளார்.