அருண் குமார் இயக்கத்தில் எடாகி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சித்தா'. இன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த படத்தைப் பற்றி ஏற்கனவே கமல்ஹாசன் பாராட்டியிருந்த நிலையில் தற்போது மீண்டும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பேசியுள்ள வீடியோவில், "குழந்தைகளுக்கு என்னதான் அம்மா சொல்லிக் கொடுத்தாலும் அவுங்களுக்கு மனதில் பதியிற மாதிரி இருக்க வேண்டுமென்றால் ஒரு கதை சொல்லணும். இதில் எனக்கு ரொம்ப பிடிச்சது, கடைசியில் ஒரு மாதிரி அழுத்தத்தோடு வெளியே வராமல் எச்சரிக்கையோடு வெளியே வருகிறோம். பெண் குழந்தைகளை பெற்றவர்கள் என்பது மட்டுமே எனக்கு காரணமாக தோன்றவில்லை. குழந்தைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும். ஆணாக இருந்தால் என்ன பெண்ணாக இருந்தால் என்ன.
இந்த படத்தில் இயக்குநருக்கு முக்கிய பாராட்டு, ஒரு விபத்தை விவரிக்கும் பொழுதே சில பேர் மூளையை பிடிச்சு அதிர்ச்சியளிப்பாங்க. அதெல்லாம் இல்லாமல் ஒரு கொலையை கேமராவையே காட்டாமல், கதிகலங்க அடிக்கும் முதல் தகவல் அறிக்கை மூலம் காட்டியது. அப்படி எதார்த்தமாக பல குற்றங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன என்பதற்கு பெரிய உதாரணம் அது.
இதில் பெரிய பாராட்டுக்குரியவர்கள் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்த சித்தார்த். எல்லாருமே ஒரு குழுமமாக இருந்து வேலை செய்திருக்கிறார்கள். படத்தை பார்க்க வேண்டியது முக்கியம் என கருதுகிறேன். குழந்தைகளை கண்டிப்பாக கூட்டிட்டு போக வேண்டும். இது அடல்ட்ஸ் மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல. உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் மகாநதி என்றால் எனக்கு அதை விட இந்த படம் பிடிச்சிருக்கு. இது வசூல் ரீதியாக வெற்றி பெற வேண்டும். இந்த படம் பார்த்தால் நம்முடைய திரை உலகத்திற்கு நல்லது. அதனால் 16 வயதினிலே மாதிரி இதுவும் வெற்றி பெற வேண்டும் என்பது எனது வாழ்த்து" என்றார்.