மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களில் ஒருவரும் பல விருதுகளை வென்ற இயக்குநருமான கே.எஸ்.சேதுமாதவன்(90) காலமானார். தமிழில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான 'நாளை நமதே', கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'நம்மவர்', சிவகுமார் நடிப்பில் வெளியான 'மறுபக்கம்', 'தாகம்', 'கூட்டுக் குடும்பம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 'மறுபக்கம்' படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது சேதுமாதவனுக்கு வழங்கப்பட்டது. இதுவரை சிறந்த இயக்குநர்களுக்கான நான்கு தேசிய விருது உட்பட மொத்தம் பத்து விருதுகளை வாங்கியுள்ள இயக்குநர் சேதுமாதவன் வயது மூப்பின் காரணமாக இன்று(24.12.20210 காலை உயிரிழந்துள்ளார். இவரின் உடலுக்கு பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சேதுமாதவன் உடலுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் 'மறுபக்கம்'. இப்படிப்பட்ட ஒரு காவியத்தை உருவாக்கியவர்தான் இயக்குநர் சேதுமாதவன். இந்திரா பார்த்தசாரதியின் “உச்சிவெயில்” என்ற குறுநாவலை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டது. அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் மறைவு திரை உலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இயக்குநர் சேதுமாதவனின் மறைவுக்கு ட்விட்டர் பதிவின் மூலம் இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், "காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர். தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள் " குறிப்பிட்டுள்ளார்.
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். pic.twitter.com/CXPcyVuMDA— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021