லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்க, அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஜூன் 3ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், நான்கு வருடங்கள் என் ரசிகர்களைக் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரிலீஸுக்கு முன்பாகவே விக்ரம் படம் மக்களிடம் சென்று சேர்ந்துவிட்டது. ஒரு நல்ல படத்தை எடுக்க முயற்சித்தோம். அதில் ஓரளவு வெற்றி பெற்றதாக நம்புகிறோம். நான் மக்களுக்குச் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. நான் சம்பாதிக்கும் பணம் அதற்கும் போகும். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை ஏன் சினிமாவிலேயே முதலீடு செய்கிறீர்கள், ஏதாவது ஷாப்பிங் மால், கடைகள் கட்டலாமே என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். ஒரு விவசாயி தான் சம்பாதிக்கும் பணத்தை நிலத்தில் போடத்தான் எப்போதும் விரும்புவான். நான் ஒரு ரூபாய் செலவு செய்தால் என்னுடைய ரசிகர்கள் நற்பணிகளுக்காக 20 ரூபாய் செலவு செய்வார்கள். எனவே அந்த ஒரு ரூபாயை நான் சம்பாதிக்க வேண்டும். இந்தப் படக்குழுவினர் தூங்கி ரொம்ப நாட்களாகிவிட்டன. இந்தப் படத்திற்கு பிறகு அவர்களுக்கு நல்ல உறக்கமும் நல்ல பட வாய்ப்பும் கிடைக்கவேண்டும். ரசிகர்களுக்கு நல்ல விருந்து காத்திருக்கிறது” எனப் பேசினார்.