
இன்செப்ஷன், டன்கிர்க், இன்டர்ஸ்டெல்லர், மொமண்டோ, பேட்மென் பிகின்ஸ், டார்க் நைட், டார்க் நைட் ரைஸஸ், ஆகிய பிரமாண்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் பிரமாண்ட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். உலகெங்கிலும் ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் நோலனுக்கு இந்தியாவிலும் லட்சோபலட்ச ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது 'டார்க் நைட்' படத்தில் வரும் ஜோக்கர் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது. ஹாலிவுட்டில் மிகவும் மதிக்கதக்க இயக்குநர்களில் ஒருவராக திகழும் இவருக்கு டெக்னாலஜி எவ்வளவுதான் வளர்ந்தாலும் ஃபிலிமில் மட்டுமே படம் பிடிப்பது இவரது வழக்கம். இந்நிலையில் மும்பையில் நேற்று ஃபிலிம் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ஃபிலிம் தொழில்நுட்பத்தில் படம்பிடிக்கும் முறையை தொடர்வது குறித்து கருத்துகளைப் பதிவு செய்ய கலந்து கொண்டார் கிறிஸ்டோபர் நோலன். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகநாயகன் கமல்ஹாசனும் மும்பை சென்றிருந்தார். அப்போது அங்கு கிறிஸ்டோபர் நோலனை சந்தித்து பேசியுள்ள கமல்ஹாசன், இந்தச் சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "மதிப்புக்குரிய கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். டன்கிர்க் படத்தை திரையரங்கில் பார்க்காமல், டிஜிட்டல் முறையில் பார்த்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பிறகு வீடு திரும்புவதற்கு முன் 'ஹே ராம்' படத்தின் டிஜிட்டல் நகலை அவருக்கு வழங்கினேன். அப்போது அவர் உங்களது 'பாபநாசம்' படம் பார்த்தேன் என சொன்னதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்தேன்" என்று மகிழ்ச்சி பொங்க ட்விட்டர் பதிவிட்டுருந்தார்.