கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான 'தசாவதாரம்' திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனை நினைவுகூரும் விதமாக சில புகைப்படங்களைத் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் கமல்ஹசான் பகிர்ந்திருந்தார். அப்பதிவிற்கு கீழே கருத்துப் பதிவிட்ட ‘பிரேமம்’ பட இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், “படம் இயக்குவதில் 'தசாவதாரம்' பிஹெச்டி போன்றது என்றால், 'மைக்கேல் மதன காமராஜன்' டிகிரி கோர்ஸ் போன்றது. ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தின் காட்சிகளை எப்படி எடுத்தீர்கள் என்று சொல்ல முடியுமா?” எனக் கேள்வியெழுப்பியிருந்தார்.
தற்போது அதற்குப் பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “நன்றி அல்போன்ஸ் புத்திரன். விரைவில் கூறுகிறேன். உங்களுக்கு எந்த அளவிற்கு கற்றுக்கொள்ள உதவும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் குறிப்பிட்டதுபோல இது ஒரு மாஸ்டர் கிளாஸ். படம் வெளியாகி பல வருடங்கள் கழிந்த பிறகும் இதுகுறித்துப் பேசுவது எனக்குப் புதிய பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.