திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும், திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் என அனைத்து சங்கங்களும் ஒன்றிணைந்து நடத்துகிறது.
சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சாமிநாதன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். மேலும் ரஜினி, கமல், மோகன்லால், மம்மூட்டி, சிவராஜ்குமார், வெங்கடேஷ், பிரபாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு திரை பிரபலங்கள் வர தொடங்கியுள்ளனர். மேலும் பார்வையாளர்களும் கூட்டம் கூட்டமாக உள்ளே செல்கின்றனர். நடிகை சாக்ஷி அகர்வால், தயாரிப்பாளர் கே.ராஜன், நடிகர் ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் மோகன் ராஜா, நடிகர் மகேந்திரன், சரவணன், நடிகை ரோஹினி, நடிகர் எம்.எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர். மேலும் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், சிவசங்கர் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.