கடந்த ஆண்டு காஜல் அகர்வால் நடிப்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி என் 150' படமும், விஜய்யின் 'மெர்சல்' படமும் பெரிய வெற்றி பெற்றதனால் தன் மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொண்டார் காஜல். இப்படி பெரிய நடிகர்களுடன் நடித்த வெற்றி பெற்றாலும் தொடர்ந்து இளம் கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கும் காஜல் தன் எதிர்கால படங்களை பற்றி பேசும்போது...."நான் அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி இருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன். பல வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதிர்ஷ்டம் இல்லாமல் இதெல்லாம் நடக்காது. என் திறமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துகிறேன்.தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக படங்கள் வருகின்றன. இந்த இரு மொழி ரசிகர்களுமே என்னை வட இந்திய நடிகையாக பார்க்காமல் தங்கள் சொந்த மாநிலத்து பெண் போல நேசிக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 'பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குயின்' படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது. மேலும் சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்கிறேன். இளம் கதாநாயகன் சர்வானந்த். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரோடு ஜோடி சேர்வது உங்கள் தகுதிக்கு சரியானதா... என்று பலரும் கேட்கின்றனர். காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்து இருக்க முடியும். இப்போதைய கதாநாயகிகள் திறமையை காட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நானும் அப்படித்தான். கதை பிடித்து இருந்தால் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கிறேன்" என்றார்.