"சூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்
பாட்டி ஆகிருச்சே
இப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து
ஜோடி சேர்ந்துருசே"
விரைவில் திரைக்கு வர இருக்கும் கோமாளி படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் வரிகள் தான் மேலே சொல்லப்பட்டுள்ளவை. இந்த பாடல் வரிகளில் ரஜினி முதல் மோடி வரை அனைவரையும் 'தொட்டு' சென்றுள்ளார் பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து. சமகால நிகழ்ச்சி அனைத்தையும் நையாண்டி தனமாக விமர்சிக்குமாறு அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளது. அதுதான் தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த பாடல் வரிகளால் ரஜினி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக ரஜினி ரசிகர்கள் சிலரிடம் பேசும் போது அவர்களின் வார்த்தைகளில் அந்த கோபம் வெளிப்பட்டதை இயல்பாகவே நம்மால் காண முடிந்தது.
இதுகுறித்து ஆவேசமாக பேசிய அவர்கள், "சூப்பர் ஸ்டார் ஜோடி எல்லாம் பாட்டி ஆயிருச்சே... பேத்தி எல்லாம் வளந்து வந்து ஜோடி சேந்திருச்சே... என்று அந்த பாடலில் கபிலன் வைரமுத்து எழுயிருக்கிறார். இதில் அவர் என்ன சொல்ல வருகிறார். மேலே சொன்ன அனைத்தும் அவருடைய தந்தைக்கும் பொருந்துமே! கண்ணதாசனோடு பாடல் எழுதிய அவர் இன்றும் எழுதுகிறாரே. இதை யாராவது விமர்சனம் செய்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா? ரஜினியை தொடாமல் வியபாரம் ஆகாது என்பதை அறிந்து கொண்டுதான் அவர் இவ்வாறு எழுதுகிறாரோ என்று எங்களுக்கு சந்தேகம் வருகிறது" என்றனர் கொதிப்போடு.
ஆனால், ரஜினி ரசிகர்கள் அனைவரும் இந்த பாடல் வரிகள், ரஜினியை விமர்சனம் செய்ததாக நினைத்துக்கொள்ளவில்லை என்பதை ஒரு தீவிர ரஜினி ரசிகரிடம் பேசிய போது நமக்கு எளிதாக புரிந்தது. இதுதொடர்பாக பாடலை எழுதிய கபிலன் வைரமுத்துவிடம் பேசும்போது, "பலரை போல நானும் அவருடைய தீவிர ரசிகன்தான். அவருடைய அரசியல் பார்வை என்பது வேறு. அதைப்பற்றி விவாதிக்கும் அளவுக்கு, அவரும் அரசியல் பற்றி அதிகம் பேசவில்லை. எனக்கும் அனுபவம் இல்லை. ஆனால் சினிமாவில் அவர் அன்றும் இன்றும் சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். பாட்டி என்பது முதல் தலைமுறைக்கான குறியீடு. பேத்தி என்பது மூன்றாம் தலைமுறைக்கான குறியீடு. மூன்றாம் தலைமுறை நடிக்க வந்த பிறகும் அவர் இன்னும் சூப்பர் ஸ்டாராகவே இருக்கிறார் என்பதுதான் அதன் பொருள். அதைத் தவறாகத்தான் புரிந்துகொள்வேன் என்று அடம் பிடிப்பவர்களை ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது" என்று ரஜினியை போன்றே ஸ்டைலாக கூறிவிட்டு நம்மை புன்னைகையோடு கடந்து சென்றார் கபிலன் வைரமுத்து.