'பாகுபலி' படத்துக்குப் பிறகு ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். 400 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ராம்சரணின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்அவருக்காக ஒரு நிமிட டீஸர் வீடியோ வெளியிட்டது படக்குழு. இதனைத் தொடர்ந்து, வரும் மே 20ஆம் தேதி ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாள் வருகிறது. இதற்கும் வீடியோ ரிலீஸாகும் என்று நினைத்தவர்களுக்கு முன்பே படக்குழு, லாக்டவுன் காரணமாக ஜூனியர் என்.டி.ஆருக்கு டீஸர் வெளியிட முடியாது என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...
"என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய இதயப்பூர்வமான வேண்டுகோள். இந்த அற்புதமான நேரத்தில் உங்களையும் உங்கள் அன்புக்குரிய நபர்களின் நலனையும் பாதுகாப்பதே முக்கியம். இதை நாம் ஒன்றிணைந்து போராடி இதிலிருந்து வலிமையுடன் வெளியே வரவேண்டும். ஒவ்வொரு வருட பிறந்தநாளின் போதும் நீங்கள் காட்டும் அன்பும் அக்கறையும் என் இதயத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் நீங்கள் எனக்குத் தரும் மிகப்பெரிய மதிப்புமிக்க பரிசு, நீங்கள் உங்கள் வீட்டில் பாதுகாப்புடன் இருப்பது தான்.
'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் பர்ஸ்ட் லுக் அல்லது டீஸர் எதுவும் வராமல் இருப்பது உங்களுக்கு ஏமாற்றமளிப்பது குறித்து நான் அறிவேன். உங்களைப் போலவே படக்குழுவினரும் ஏமாற்றத்தில் உள்ளோம். நம்புங்கள். படத்திலிருந்து தரமான ஒரு விஷயத்தை உங்களுக்குக் கொடுக்க அவர்கள் கடுமையாக உழைத்தார்கள். ஆனால் சமூக விலகல் குறித்த அறிவுறுத்தல் மற்றும் விதிமுறைகளால் அவர்களால் முடிக்க முடியவில்லை. ராஜமௌலியால் உருவாக்கப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' ஒரு அற்புதமான படம், அது உங்களைத் திருப்திப்படுத்தும் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. மீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.