ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆர்.ஆர்.ஆர்.’ இப்படம் ஜனவரி 7ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (10.12.2021) இரவு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமௌலி, நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், நடிகை ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு, பத்திரிகையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
நிகழ்வில், விஜய், தனுஷ் உள்ளிட்ட தமிழ்த் திரையுலக நடிகர்கள் நேரடி தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்திருப்பது குறித்து ஜூனியர் என்.டி.ஆரிடம் கேட்கையில், "எல்லா நடிகர்களும் எல்லா மொழிகளுக்கும் வரவேற்கப்படுகிறார்கள். இதை ஒரு போட்டியாக எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். மக்கள் திறமையைத்தான் தேடுகிறார்கள். யாரிடம் திறமை இருக்கிறதோ அவர்களை மக்கள் ஏற்கிறார்கள். ‘பாகுபலி’க்குப் பிறகு பிராந்திய திரைத்துறையாக இல்லாமல் இந்திய திரைத்துறையாக நாம் மாறிவருகிறோம். விஜய் சாரின் ‘மாஸ்டர்’ தெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தனுஷ் சாரின் படங்களுக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நமக்கிடையே உள்ள தடைகளை உடைத்து மிகப்பெரிய ஒரு திரைத்துறையாக மாற வேண்டும். அது தற்போது நடந்துகொண்டிருக்கிறது. ராஜமௌலி அவருடைய கனவு படமான மகாபாரதத்தை இயக்கினால் இந்தியாவில் உள்ள அனைத்து உச்ச நட்சத்திரங்களும் ஏன் இணைந்து நடிக்கக் கூடாது. அந்தப் படம் மிகப்பெரிய இந்திய திரைப்படமாக இருக்கும்" எனப் பதிலளித்தார்.