கடந்த மூன்று மாதங்களாக கரோனாவால் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் திரையுலகம் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் மீண்டும் திரையரங்குகள் திறப்பதற்குப் பல மாதங்களாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் முடிக்கப்பட்ட படங்களை நேரடியாகத் தங்களது தளத்தில் வெளியிட ஓ.டி.டி. பிளாட்ஃபார்ம் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குன்ஜன் சக்ஸேனாவாக நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. முன்னதாக, ஏப்ரல் 24-ஆம் தேதி அன்று இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று பகிர்ந்துள்ளது.
சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவைப் பற்றியது. போரின்போது தீரமாகச் செயல்பட்டதற்காக ஷௌர்ய வீர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.