தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி, கடந்த 2009ஆம் ஆண்டு தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது. இந்த சூழலில் ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிவதாக சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல என்றும் என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது என்றும் கூறியிருந்தார். ஜெயம் ரவியின் இந்த முடிவு பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இதையடுத்து ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 2009ஆம் ஆண்டு தங்களுக்கு நடந்த திருமணத்தையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு அடுத்த மாதம் விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்த சூழலில் ஆர்த்தி, ஜெயம் ரவியின் விவாகரத்து தன்னிச்சையாக எடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். மேலும், ஜெயம் ரவியின் இந்த முடிவு, முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும், என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று எனக் கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். மேலும் ஜெயம் ரவியை சந்திக்க பலமுறை முயற்சித்தும் பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
இந்த விவகாரம் கோலிவுட்டில் பரபரப்பை கிளப்ப, ஜெயம் ரவி விவகாரத்து முடிவு எடுப்பதற்கு பெங்களூரை சேர்ந்த கெனிஷா என்ற பாடகிதான் காரணம் என பேசப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயம் ரவி, “வாழு வாழ விடு. என்னுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரையும் இழுக்காதீங்க. தனிப்பட்ட வாழ்க்கையை தனிப்பட்டதாகவே இருக்க விடுங்க. கெனிஷா 600 மேடைகளில் பாடியவர். பல உயிரை காப்பாற்றிய ஒரு ஹீலர். நானும் கெனிஷாவும் எதிர்காலத்தில் ஒரு ஹீலிங் சென்டர் ஆரம்பிக்க இருக்கிறோம். அதன் மூலம் பல பேருக்கு உதவ வேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். அதை கெடுக்காதீங்க. அதை யாராலும் கெடுக்கவும் முடியாது” என்றார்.