கரோனாவால் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில் தற்போதுதான் சில தளர்வுகளுடன் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலங்கானா மாநிலத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளைத் தொடங்க அம்மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
இதற்கான அரசாணையில் படப்பிடிப்புகளில் குறைவான நபர்களே கலந்துகொள்ள வேண்டும் என்றும், அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திரையரங்குகள் திறப்பதற்கான எந்த அறிவிப்பையும் தெலங்கானா அரசு வெளியிடவில்லை.
இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி தலைமையில் தெலுங்கு திரைப்பட நடிகர் நாகார்ஜுன், இயக்குனர் ராஜமவுளி, தயாரிப்பாளர்கள் சி.கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் அமராவதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேற்று சந்தித்துப் பேசினர்.
தெலுங்கு திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் பிரச்சினையால் ஏற்படும் இழப்புக் குறித்து முதல்வருடன் விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நடிகர் சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்” என்றார்.