
நடிகர் சூர்யா 'எதற்கும் துணிந்தவன்' படத்திற்கு பிறகு இயக்குநர் பாலா இயக்கத்தில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 41' என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பதினெட்டு வருடம் கழித்து பாலா படத்தில் நடிக்கும் சூர்யா, இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வந்தது.
இந்நிலையில் தற்போது வந்திருக்கும் தகவலின் படி சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை ஒரு வேடத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் சூர்யாவிற்கு தங்கையாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கன்னியாகுமரியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. பின்னர் மதுரையில் படப்பிடிப்பு நடத்தி விட்டு விரைவில் படக்குழு கோவா செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். '2டி எண்டர்டெயின்மெண்ட்' சார்பாக சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர்.