நடிகர் விவேக் (59) திடீர் நெஞ்சுவலி காரணமாக நேற்று முன்தினம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து, திரைத்துறை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், விவேக்கின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து இசைஞானி இளையராஜா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "விவேக்கின் மறைவு என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் காலையிலிருந்து இப்போதுவரை அந்தத் துக்கத்திலேயே என் மனது இருந்தது. காரணம், நடிகர் விவேக் அவர்கள் என் மீது மிகுந்த மரியாதையையும், அன்பும், அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே அவர் என்னுடைய ரசிகராக இருந்திருக்கிறார். பின்னால், அபிமானியாக மாறி, பக்தராக மாறக்கூடிய அளவுக்கு விவேக் என்னை நேசித்திருக்கிறார்.
சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றார். தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எப்போது சந்தித்தாலும் சொல்வார். நான் கேட்டுவிட்டு அவரை ஊக்கப்படுத்துவேன். அவருக்கு எனக்குத் தெரிந்த யுக்திகளையும் சொல்வது வழக்கம். அவருடைய அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகரிடம் நான் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.
விவேக்கின் குடும்பமே என் மீது பாசமும், நேசமும், அன்பும் வைத்திருக்கூடிய ஒரு அற்புதமான குடும்பம். அவருடைய மறைவு அவரது குடும்பத்திற்கு அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துக்கத்திலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விவேக்கின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பம் துக்கத்திலிருந்து வெளிவரவும் இறைவனுடைய அருள் வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
இளையராஜா இந்த வீடியோவை நேற்றே வெளியிட்டிருந்த நிலையில், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.