ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படம் 2023 ஆம் ஆண்டு நடக்கும் ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பாக அனுப்பப்படும் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் 95வது ஆஸ்கர் விருது போட்டியில் இந்தியா சார்பாக குஜராத்தி படம் 'செல்லோ ஷோ' தேர்வானதால் தனிப்பட்ட முயற்சியில் 15 பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர் படக்குழு ஆஸ்கருக்கு விண்ணப்பித்துள்ளது. இதன் காரணமாகத் தீவிர ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஜமௌலி.
இதனிடையே, திரைத்துறையில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுக்கு ஆங்கில மொழி அல்லாத படத்திற்கான பிரிவில் ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படமும் சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடலும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை தட்டி சென்றுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் கீரவாணி விருதைப் பெற்றார். இது தொடர்பாக ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழுவையும் கீரவாணியையும் ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில், ஷாருக்கான், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் மற்றும் எம்.பி.யான இளையராஜா கீரவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "உங்கள் கடின உழைப்புக்குத் தகுதியான வெற்றி கிடைத்துள்ளது. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்" எனக் குறிப்பிட்டு படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.