Skip to main content

"தன் தந்தையை விட அதிகமாக என்னுடன்தான் இருந்தான்..." -  இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் நெகிழ்ச்சி 

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜா 75 நிகழ்ச்சி சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. நேற்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடக்கிவைத்த இந்த நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் தங்க வயலின் பரிசளிக்கப்பட்டது.
 

arrahman ilayaraja



வருவாரோ மாட்டாரோ என்ற சந்தேகத்தில் இருந்த ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும்படியாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டார். மேடையேறிய ஏ.ஆர்.ரஹ்மான், தான் இளையராஜாவுடன் பணிபுரிந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார். முதன் முதலில் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்குள் நுழையும்போது, ஒரு ஹெட்மாஸ்டர் ரூமுக்குள் நுழையும் மாணவன் போல தான் உணர்ந்ததாகத் தெரிவித்தார். மேலும், இசைக்கலைஞர்கள் என்றாலே போதைப் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள் என்ற தன் அனுபவத்தையும் எண்ணத்தையும் மாற்றி எந்த போதையும் இல்லாமலேயே மிகச் சிறந்த இசையைக் கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை உண்டாக்கியவர் இளையராஜாதான் என்று கூறினார்.

இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசும்போது, "நீ உன் அப்பா கூட இருந்ததை விட என் கூடத்தான் அதிகமா இருந்திருக்க" என்று கூற அதை ஆமோதித்து ரஹ்மான் சிரித்தார். "நீ முதன் முதல்ல என் கிட்ட எந்தப் படத்துக்காக வாசிச்ச நினைவிருக்கா?" என்று இளையராஜா கேட்க, ஏ.ஆர்.ரஹ்மான் யோசிக்காமல் உடனே "மூன்றாம் பிறை" என்றார். தொடர்ந்து, "அதில் ஒரே ஒரு சீனுக்கு வாசிக்கத்தான் என்னை கூப்பிட்டீங்க, முடிஞ்சதும் ஸ்கூலுக்குப் போனு சொல்லி அனுப்புனீங்க" என்றார்.

பின்னர் இளையராஜா இசையில் தான் வாசித்த ஒரு சின்ன இசைக்கோர்வையை ரஹ்மான் தனது தொலைபேசியில் ஒலிக்கவைத்தார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுஹாசினி, "இங்கதான் பியானோ இருக்கே... நீங்க அதுலயே வாசிக்கலாமே" என்று கூற, ரஹ்மான் 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலின் இசையை வாசித்தார். நடிகை கஸ்தூரி உடனே, "இந்தத் தருணம் மீண்டும் அமையுமா என்று தெரியவில்லை. அதுனால ராஜா சார் பாடணும், ரஹ்மான் சார் வாசிக்கணும்" என்று கூற ரசிகர்களின் பெரும் கொண்டாட்ட குரல்களுக்கு இடையே ரஹ்மான் இசைக்க, இளையராஜா 'மன்றம் வந்த தென்றலுக்கு' பாடலை பாடினார். இது நிகழ்வை பார்க்க வந்த இசை ரசிகர்களுக்கு பேரின்பமாக அமைந்தது. சமூக ஊடகங்களின் இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வைரல் ஆகின.                          

 

 

சார்ந்த செய்திகள்