இசைஞானி இளையராஜா சமீப காலங்களில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறார். இவர் ஏற்கனவே காப்புரிமை சம்பந்தமாக கருத்துக்களை வெளியிட்டு விமர்சனத்திற்கு உள்ளாகி, தற்போது மீண்டும் புதிய படங்களில் தன்னுடைய பாடல்களை பயன்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். சமீபத்தில் அரங்கேறிய ஒரு நேர்காணலில் அவரது பாடல்களை புதிய படங்களில் பயன்படுத்தப்படுவது குறித்து 96 படத்தில் இளையராஜாவின் பாடலான 'யமுனை ஆற்றிலே" பாடலை கதாநாயகி பாடுவது போல் அமைந்திருப்பதை உதாரணமாக வைத்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த இளையராஜா....
''பழைய பாடல்களை படங்களில் பயன்படுத்துவது தவறானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடக்கும் கதை என்பதால் அந்த கால கட்டத்தை சேர்ந்த பாடலை உபயோகப்படுத்தவேண்டும் என அவசியமில்லை. அந்த காலக்கட்டத்திற்கு ஏற்றவாறு பாடல்களை உருவாக்கவேண்டும். அது முடியாத போது ஏற்கனவே பிரபலமான பாடல்களை கொண்டுவந்து திணிக்கிறார்கள். இது ஆண்மையற்றதனமாக இருக்கிறது. 1980ல் வந்த பாடலென்றால் அதற்கு ஏற்றவாறு பாடலை உருவாக்க வேண்டும். அப்படி ஏன் பாடலை இவர்களால் போட முடியவில்லை என்றால் மக்களை என் இசையில் இருந்து பிரிக்க முடியவில்லை. அதனால்தான் என் பாடலை அங்கு பயன்படுத்திருக்கிறார்கள். இது ஆண்மையற்ற செயல்'' என கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதற்கிடையே 96 படத்தில் இளையராஜா இசையமைத்த பாடல்களை முறையான உரிமம் பெற்றுதான் பயன்படுத்தியதாக படக்குழு சார்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் அரங்கேறிய இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு இருந்தது. அதேபோல் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இளையராஜா, எஸ்.பி.பி, ஜேசுதாஸ் கூட்டாக பங்கேற்கும் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்ற நிலையில் இளையராஜா இப்படி சர்ச்சையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருவது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தி வருகிறது.