Skip to main content

'இளையராஜா 75' விழாவை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறார்

Published on 29/01/2019 | Edited on 29/01/2019
ilaiyaraja 75


 
இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 'இளையராஜா 75' விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாக்களுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.  ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இதில், இன்னொரு சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் எஸ்.எஸ். துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்தனர். 

 

 

அவர்களின் அழைப்பை ஏற்று, பிப்ரவரி 2ஆம் தேதி இவ்விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், 'இளையராஜா 75' என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார். கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 2ம் தேதி முன்னணி கதாநாயகிகளின் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. திரைத்துறையின் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இசைஞானி இளையராஜாவிற்கு   மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய 75வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையிலும் இவ்விழாவை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3ஆம் தேதி பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா நேரடி இசை விருந்து அளிக்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்