மறைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் வசித்த சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகருக்கு ‘எஸ்பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் வைக்க வேண்டும் என அவரது மகன் எஸ்பி.சரண் கடந்த 23ஆம் தேதி முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு கொடுத்தார். இதனை ஏற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் நினைவு நாளான கடந்த 25ஆம் தேதி காம்தார் சாலைக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து எஸ்.பி.சரண் வீடியோ வெளியிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்துடன் பயணித்த திரைக்கலைஞர்கள் நன்றி தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசன் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் தற்போது முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இளையராஜா எக்ஸ் பதிவில், “என் நண்பன் பாலுவின் நினைவாக, அவன் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சாலைக்கு எஸ். பி. பாலசுப்ரமணியம் சாலை என்று பெயரை மாற்றி வைத்ததற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக மக்களின் சார்பிலும், திரையுலகத்தின் சார்பிலும், நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து வைரமுத்து, “எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் பெயரை அவர் வாழ்ந்த நகரின் ஒரு தெருவுக்குச் சூட்டியிருப்பது பெருமகிழ்ச்சி தருகிறது. பூமியில் அவருக்குக் கிடைத்த காலக் கல்வெட்டு இதுதான். கலைஞர்கள் மீது முதலமைச்சர் எவ்வளவு காதல் கொண்டிருக்கிறார் என்பதற்கு இதுவே சான்று. நல்ல செயலுக்கு நன்றி” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.