பிரபல கிட்டார் வாசிப்பாளர் கிட்டாரிஸ்ட் சந்திரசேகர் (79) நேற்று இரவு காலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களுக்கு கிட்டார் இசையமைத்துள்ளார் கிட்டாரிஸ்ட் சந்திரசேகர். இளையராஜா இசை குழுவில் அவருடன் பல ஆண்டுகளாக பயணித்தவர்.
'இளைய நிலா பொழிகிறதே’, 'பாடும் வானம்பாடி' உள்ளிட்ட இளையராஜாவின் பல ஹிட் பாடல்களில் இவரது கிட்டார் இசை ரசிகர்களை கவர்ந்திருக்கும். சந்திரசேகரும் அவரது சகோதரரான மறைந்த ட்ரம்மர் புருஷோத்தமனும் கே.வி. மகாதேவன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளனர்.
இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் இளையராஜா வீடியோ வெளியிட்டு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "என்னுடன் பணியாற்றிய எனக்கு மிகவும் பிரியமான இசைக் கலைஞர் சந்திரசேகர் இயற்கை எய்தினார் என்ற செய்தியைக் கேட்டு மிகவும் துயருற்றேன். அவர் என்னுடன் இருந்த புருஷோத்தமனின் சகோதரர். நாங்களெல்லாம் ஒரே நேரத்தில் மேடையிலிருந்து திரைக்கு வந்த இசைக் கலைஞர்கள். நிறைய பாடல்களில் அவர் கிடார் வாசித்திருக்கிறார். அவர் இசையமைத்த பாடல்கள் இன்னும் மக்கள் மத்தியிலும் அவர்கள் நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்றிருக்கின்றன. அதை நினைத்து மிகவும் வருத்தமடைகிறேன்" என்றார்.